மே 1 ஆம் தேதி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது தொழிலாளர் தினம்தான். ஒரு மணி நேரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாட்டிற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தும் விதமாகவும், தொழிலாளர்களின் ஒற்றுமையை குறிக்கும் விதமாகவும் ஆண்டு தோறும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பல தொழிலாளர்களின் உயிர் தியாகத்தால் உருவான இந்த தொழிலாளர் தினத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
முதன் முதலாக 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேர வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் போராடத் தொடங்கினர். ஆனால் அந்த போராட்டம் தொழிலாளர்கள் மத்தியில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முறை தொழிலாளர்கள் குரல் கொஞ்சம் ஓங்கி இருந்ததால், அமெரிக்க அரசு அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 10 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை இயற்றியது.
பின்னர் 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து தொழிலாளர் இயக்கங்களும் ஒன்றிணைந்து ” அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு ” என்ற இயக்கத்தை உருவாக்கியது. அந்த வருடம் மே 1 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கான அறிவிப்பை இந்த இயக்கம் அறிவித்தது. தொழிலாளர் தினம் உருவாக இந்த இயக்கமே முக்கிய காரணமாக அமைந்தது.
உலகமெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்க அரசு,1890 ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்றது.இந்த வெற்றியை குறிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து 1890 ஆம் ஆண்டு அமெரிக்காவில், 8 மணி நேர வேலை,8 மணி நேர ஓய்வு மற்றும் 8 மணி நேரம் உறக்கம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்புக் கேற்ற ஊதியமும் கேட்டு பல தொழிலாளர்கள் போராடத்தில் ஈடுப்பட்டனர். இதை எதிர்த்த அமெரிக்க அரசு தொழிலாளர்கள் மத்தியில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஏராளமான தொழிலாளர்களால் அமெரிக்க அரசால் கொலை செய்யப்பட்டனர்.
இந்தியாவில் முதன் முதலாக 1923 ஆம் ஆண்டு மே மாதம், சென்னையில் பொதுவுடைமைவாதி ம. சிங்காரவேல் கடற்கரையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார். அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவிலும் ஆண்டு தோறும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தினமும் வீட்டிற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நியூஸ் 7 தமிழ் குழுமத்தின் சார்பாக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
-சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்







