அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர்

அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவரை காவல்துறை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்த கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்…

அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவரை காவல்துறை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்த கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். கிராம மக்களிடம் ஊராட்சி பற்றிய கருத்துக் கேட்பு மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட வரவு செலவு கணக்கை பற்றி விவாதித்து கொண்டிருந்தார்.

அப்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்த துணைத் தலைவர் சரண்யா திடீரென ரவிச்சந்திரனின் தலையில் காலணியால் அடித்துவிட்டுத் தப்பி செல்ல முயன்றார். இதனை கண்ட பொதுமக்கள் சரண்யாவை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டினர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது ஊராட்சிக்கு எதிராகவே சரண்யா பலமுறை செயல்பட்டு வந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர். கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரியை துணை தலைவர் செருப்பால் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.