முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டது என்று அனைவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கைத்…

கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டது என்று அனைவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து, பொதுமக்களை முகக் கவசம் அணியுமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் வியாஸ், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரதீப் வியாஸ் கூறுகையில், “ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இந்த ஆண்டில் முதல் முறையாக 1,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகமெங்கும் இந்த வைரஸ் பரவல் வேகமெடுத்தது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்காக தடுப்பூசி கண்டறியப்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாறு விஞ்ஞான உலகத்துக்கு சவாலை அளித்து வருகிறது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.