நாட்டிலேயே முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் நேற்று ஓய்வு பெற்றார்.
கொரோனா கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தது. அதன்தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடே அச்சத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த கேரள மாணவர், நாடு திரும்பியிருந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சூர் பொது மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டிருந்தது. அப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பொது மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த உதயனிடம் அந்த மாணவரை திருச்சூர் பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லுமாறு மருத்துவ அதிகாரி கோரினார்.
இதையடுத்து, அவர் தயங்காமல் அந்த மாணவரை அழைத்துச் சென்று திருச்சூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு கொண்டு சேர்த்தார். 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றிவந்த உதயன், இதுபோன்ற பல ஆபத்தான காலகட்டங்களில் தைரியத்துடன் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.
இதுகுறித்து உதயன் கூறுகையில் “நோய் பரவுதலின் தீவிரம் மற்றும் நோய்த்தொற்றின் அபாயம் எனக்கு தெரியும். ஆனாலும் நான் யோசிக்காமல் செயலாற்றினேன். 17 வருட சேவைக்கு பிறகு 56 வயதில் ஓய்வு பெற்றேன். த மருத்துவ குழுவில் ஒர் அங்கமாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஓய்வுக்கு பிறகு சமூக நலன் சார்ந்த வேலைகளில் ஈடுபடப்போகிறேன்” என்றார்.








