மாமன்னர் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்*லிடப்பட்டனர்.
அந்தவகையில் இன்று மருது சகோதரர்களின் நினைவு நாள் ஆனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், ‘ஜம்புத் தீவு பிரகடனத்தை’ முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.




