நடிகர் மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது உடனிருந்த சின்னத்திரை நடிகர் கமலேஷிடம் கூட எதுவும் சொல்லாமல் தானே புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த கடைசி நிமிட நிகழ்வுகள் குறித்து நடிகர் கமலேஷ் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பல திரைப்படங்களில் நடித்தும், உதவி இயக்குநராக பணியாற்றியும் வந்தவர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990-ம் ஆண்டு, தனது வீட்டை விட்டு ஓடிவந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார்.
பின்னர் ராஜ்கிரனிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் பணிபுரிந்தார். பின்னர் இயக்குநர் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார்.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ’கண்ணும் கண்ணும்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர் கடந்த 2014-ம் ஆண்டு ’புலிவால்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இயக்கம் பெரிதாக கை கூடாத நிலையில், மீண்டும் நடிப்பு பக்கம் கவனம் செலுத்தி வந்த அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். வில்லன் வர்மாவின் வலதுகரமாக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.
அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று, “ஜோதிடர்கள் தான் இந்தியாவை பின்னோக்கி தள்ளுகின்றனர்” என்று கூறியவர். இதனால் இவர் மீது பலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், 56 வயதான நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல் மற்றும் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாரிமுத்துவுடன் இன்று காலை டப்பிங்கில் இருந்த சின்னத்திரை நடிகர் கமலேஷ், மாரி முத்துவின் இறுதி நிமிடங்கள் குறித்து நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஷெர்லியிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது நடிகர் கமலேஷ் கூறியதாவது:
டப்பிங் ரூமில் இருந்து வெளியே வந்த போதே பார்க்க ஒரு மாதிரியாக இருந்தார். அவர் மனைவியிடம் தொலைபேசி மூலம் மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார். மருத்துவமனை வாசலில் நிலைகுலைந்துவிட்டார். மாரிமுத்து மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார், ஆரோக்கியமாக இருப்பார். அவர் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை, சொல்லி இருந்தால் நானே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பேன். இவ்வாறு நடிகர் கமலேஷ் கூறினார்.
நடிகர் கமலேஷ், நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஷெர்லியிடம் பகிர்ந்துகொண்ட முழுக்காணொலியை இங்கே காணலாம்…







