மோகன்லால் நடித்து 3 தேசிய விருதுகளைப் பெற்ற ’மரைக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற வரலாற்றுப் படத்தின் ரிலீஸ் தேதி நான்காவது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கத்தில், மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம், ’மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்துக்கு தமிழில், ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவரான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. குஞ்சாலி மரைக்கார், கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக போராடியவர்.
இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், பிரபு, சுகாசினி, சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வருடம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அதே தேதியில் இந்த வருடம் வெளியிட இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா மீண்டும் விளையாடி வருவதால் இப்போது மீண்டும் ஒரு முறை தள்ளி வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், நடிகர் மோகன்லால் உறுதி செய்துள்ளனர்.







