பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணி அதிரடியாக விளையாடி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து டெல்லி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. கேப்டன் கே.எல். ராகுல் 61 ரன்களும், மயங்க் அகர்வால் 69 ரன்களும் விளாசினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ஸ் 11 ரன்னிலும், பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 22 ரன்களும், ஷாருக்கான் 15 ரன்களும் எடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 32 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் அதிரடி காட்டினார்.

பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த தவான், 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 92 ரன்கள் குவித்தார். இறுதியாக, டெல்லி அணி 18 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 198 ரன்கள் குவித்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.







