மணிப்பூர் வீடியோ விவகாரம்: 7-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

மணிப்பூர் வீடியோ மற்றும் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது.  மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.…

மணிப்பூர் வீடியோ மற்றும் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது. 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆரப்பாட்டத்தின் போது கலவரம் வெடித்தது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20) மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து அலுவல்களையும் ஒத்திவைக்கக் கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் இன்று நோட்டீஸ் அளித்தார். இதேபோல் மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி மனோஜ் ஷா, ராகவ் சதா, ரஞ்சித் ரஞ்சன் உளிட்டோர் நோட்டீஸ் அளித்தனர்.

மக்களவை இன்று கூடியவுடன், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதற்கு ஆளும்கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று கூடியதும் மணிப்பூர் வீடியோ விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஆளுங்கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.