கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவு – விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக்…

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி பின்னர் கடந்த வாரம் சற்று குறைந்து ரூ.85-ல் இருந்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. மேலும் பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து வரும் நாட்களில் வரத்து அதிகரித்து தக்காளி விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை அதிகரித்தது.

இந்த நிலையில் இன்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்து சுமார் 60 லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளி, இன்று 23 லாரிகளில் மட்டுமே வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் விலை அதிகரிக்க தொடங்கியது முதலே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன. இன்று முதன் முதலாக தக்காளி வரத்து 30 லாரிகளுக்கும் கீழ் குறைந்துவிட்டது.

தக்காளி வரத்து குறைவு காரணமாக மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் தக்காளி விலை மேலும் அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால் விற்பனை எந்த அளவுக்கு பாதித்துள்ளது, இந்த நிலை எப்போது மாறும்… இதற்கு என்ன காரணம்… உள்ளிட்டவை குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

சென்னை தக்காளி சிறு மொத்த வியாபாரிகள் நல சங்க தலைவர் மணிகண்டன்… செயலாளர் மாரிமுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரி பாலாஜி, சென்னை கோயம்பேடு தந்தை பெரியார் அங்காடி விற்பனையாளர் சங்க தலைவர் சுவாமி நாதன் ஆகியோர் பேசுகையில், தக்காளி விலை உயர்விற்கு பருவம் தவறி மழை பெய்தது தான் காரணம். ஆடி 18க்கு பிறகு தக்காளி விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தக்காளி உற்பத்தி கிடையாது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கல்கத்தா, போன்ற மாநிலங்களும் இங்கு வாங்குவதால் வரத்து குறைகிறது.

சமீபத்தில் விலை குறைய காரணம் அப்போது சற்று வரத்து அதிகாரித்தது. 100 பெட்டிகள் வரை விற்பனை நடந்த இடத்தில் 20 பெட்டிகள் தான் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைவாக இருந்தாலும் தரத்தில் குறைவு இல்லை. மழை இல்லை என்றால் ஆடி 18 இல் இருந்து உடுமலைப்பேட்டை தக்காளி சந்தைக்கு வரும். இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு விலை அதிகரித்து ஒரு மாதம் வரை இந்த நிலை நீடித்தது இல்லை. தக்காளி மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. தக்காளி செடிகள் நோய் பாதிப்பால் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.