மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும்…

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி டெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமித்ஷா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் புதிய வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆயுதம் தாங்கிய கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மெய்டி சமூகத்தினர் 3 பேரும், குக்கி சமூகத்தை சேர்ந்த ஒருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. தாக்குதலின் பின்னணியில் குக்கி சமூகத்தினர் உள்ளதாக மெய்டி சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இரு சமூகத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுவதால் ராணுவ பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் பழங்குடியினர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராகி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போதைய நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் விசாரணையை நடத்த முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.