2-வது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி – கடும் எதிர்ப்புக்கிடையே கால்வாய் வெட்டும் பணி….

கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல சுரங்க விரிவாக்கத்துக்காக என்எல்சி நிறுவன நிர்வாகம் இரண்டாவது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க…

கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல சுரங்க விரிவாக்கத்துக்காக என்எல்சி நிறுவன நிர்வாகம் இரண்டாவது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி,கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வளையமாதேவி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதற்காக கனரக வாகனங்கள், ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் என்எல்சி நிர்வாகம் நிலங்களை சமன்படுத்தும் பணிகளை நேற்று மீண்டும் தொடங்கியதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே போலீசாரின் துணையுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வளையமாதேவி கிராமத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. வளையமாதேவி கிராமத்திற்குள் செல்ல முயன்ற அக்கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டதால், சேத்தியாதோப்பில் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், போராட்ட நோக்கில் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.

இந்த நிலையில், நிிலம் கையகப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக வட்டாட்சியர் தலைமையில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2-வது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனம், விவசாயிகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறியும் கால்வாய் வெட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கால்வாய் வெட்டும் பணியால் வளையமாதேவி கிராமத்தின் பக்கத்தில் உள்ள கரிவெட்டி மக்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் எங்கள் கிராமத்தில் இருந்து வெளிவர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், எங்களை கிராமத்திலிருந்து வெளியேறுமாறு என்எல்சி நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்காத வரை நாங்கள் ஊரை விட்டு செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர். தற்பொழுது வளையமாதேவிலிருந்து கரிவெட்டி செல்லும் பிரதான சாலையை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு பைப் லைன் போடுவதற்கான வேலை முழு வீச்சில் என்.எல்.சி நிர்வாகம் மூலம் நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படுவதை கண்டித்து என்.எல்.சி நிறுவனத்தை நாளை முற்றுகையிடப் போவதாக பாமக அறிவித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை என்.எல்.சி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.