தொடங்கியது மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு

இரண்டு கட்டமாக நடைபெறும் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் மிகவும்…

இரண்டு கட்டமாக நடைபெறும் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

38 சட்டமன்ற தொகுதிகளுக்கான இன்றைய வாக்குப்பதிவில் மொத்தமாக 173 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் 15 பேர் பெண் வேட்பாளர்கள் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவானது இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. இதில் 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையிலும் 3 முதல் 4 மணி வரை கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்கள் வாக்களிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவில் 12,09,439 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 5,80,607 ஆண் வாக்காளர்களும் 6,28,657 பெண் வாக்காளர்கள் மற்றும் 175 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 38 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் வாக்குப் பதிவுக்காக 1,721 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திற்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.