மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் இனமோதல்களை தடுத்து நிறுத்த கோரி மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக உருவெடுத்து 50 நாட்களை கடந்துவிட்டது. சுமார் 120 பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் ஏராளமானோரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.
பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளள்னர். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரும் ஒருவரின் வீடுகளில் ஒருவர் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ராணுவம், துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் மத்திய அரசே திணறி வருகிறது
இதற்கிடையே, மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3ஆம் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மணிப்பூரில் ஜூலை 5ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சனை தொடர்பாக இவர்களுக்கு இடையே கடந்த இரு மாதங்களாக மோதல்கள் ஏற்பட்டு மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறி உள்ளது.
ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு அமைதி ஏற்படுத்த வேண்டும்
என்பதை வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.








