காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு அமைய உள்ள மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டுவை அடுத்த டி.புதுபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இராணுவ வீரர் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்தார். மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் கடந்த 2019ஆம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றுவிட்டு 2019ஆம் ஆண்டே இராணுவத்தில் சேர்ந்தார். தர்மராஜ் – ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒருவர் லட்சுமணன். அண்ணன் இராமன் பி.பி.ஏ. முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் அவரது தாயாரான ஆண்டாள் இராணுவ வீரரின் படத்தை வைத்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இராணுவ வீரரின் மரணத்தால் கிராமமே சோகமயமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள், தனியார் அமைப்பினர் வீட்டில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, ராணுவ வீரரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரை டி.புதுப்பட்டியில் உள்ள சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டிய இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளரை சந்தித்துப் பேசுகையில், நேற்றைய தினம் ஊடகங்களில் பார்த்தபோது உயிரிழந்த ராணுவ வீரர் தந்தையின் பேட்டியில், ஒரு மகன் தாக்குதலில் உயிரிழந்து மகனின் ஈரம் காய்வதற்கு முன்பே மற்றொரு மகனை ராணுவத்திற்கு அனுப்புவதாகக் கூறியது மெய்சிலிக்க வைத்துள்ளது.
முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், ராணுவ வீரருக்கு 20 லட்சம் என அரசு ஒதுக்கிய திட்டத்தினை தமிழக அரசு விரைந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ராணுவ வீரரின் உடன் பிறந்த சகோதரர் ராமருக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். ராணுவ வீரரை நல்லடக்கம் செய்யவிருக்கும் இடத்தில் அமையவுள்ள மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு ஓர் முன்னுதாரணமாக அமையும் என்றார்.
-ம.பவித்ரா








