நெருங்கும் குடியரசு தலைவர் தேர்தல் – சரத் பவாரை சந்தித்த மம்தா

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் நாளை ஆலோசனை நடைபெற உள்ள நிலையில், சரத் பவாரை, மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி…

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் நாளை ஆலோசனை நடைபெற உள்ள நிலையில், சரத் பவாரை, மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சோனியா காந்தியின் விருப்பத்தை அவரால் அனுப்பப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவாரை நேரில் சந்தித்து தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியது.

எனினும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தான் விரும்பவில்லை என சரத் பவார் கூறியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், எதிர்க்கட்சிகள் தரப்பில் சரத் பவாரை நிறுத்துவதன் மூலம், அவர் ஒரு வலிமையான போட்டியாளராக இருப்பார் என்ற கருத்து எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில் தங்கள் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூவர் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி வந்துள்ள மம்தா பானர்ஜி, சரத் பவாரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சரத் பவார், நாட்டின் அரசியல் சூழல் குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆழமான ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.