நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியினுடைய வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மமதா பானர்ஜி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார். அதில் நீண்ட இழுபறிக்கு பின்னர் தோல்வியடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தோல்வியை தொடர்ந்து தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கானது (நாளை) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
நந்திகிராம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் 11 சுற்றுகளில் மமதா சுவேந்து அதிகாரியை விட முன்னணியில் இருந்தார். ஆனால், அடுத்த நான்கு சுற்றுகளில் சுவேந்து அதிகாரி, மமதாவைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த திடீர் மாற்றம் குறித்து மமதா கடுமையாக விமர்சித்தார். தான் வெற்றி பெற்றதாக ஆளுநர் உட்பட வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் திடீரென அனைத்தும் தலைகீழாக மாறியதாகவும் மமதா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதற்கு முன்னதாக, நந்திகிராம் மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் தான் ஏற்றுக்கொள்வதாக மமதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.