மாமன்னன் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நெல்லை ராம் தியேட்டரில் அடிமுறை கலைஞர்கள், தற்காப்பு கலை வீரர்கள், ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நெல்லை ராம் தியேட்டரில் கட் அவுட் அமைத்து அடிமுறை கலைஞர்களின் தற்காப்பு கலை வீரர்கள் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். அப்போது நெல்லை மாவட்ட அடிமுறை கலைஞர்கள் தற்காப்பு கலையை நடத்தி காண்பித்தனர். அழிந்து வரும் அடிமுறை கலைஞர்களின் உண்மை நிலையை திரைப்படம் விளக்குவதாக கூறப்படுகிறது. .
சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமே நாட்டு அடிமுறை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை பிரபலப்படுத்தியதாக கூறப்படுகிறது. எதிராளியை கையாலும் காலாலும் தாக்கி வீழ்த்துவதே இதன் சிறப்பம்சம்.
ஆயுதம் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, அடிமுறை உதவும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாமன்னன் திரைப்படத்திற்கு மட்டுமே இந்த திரையரங்கில் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







