”சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியமே மாமன்னன்” – திருமாவளவன் ட்வீட்!

மாமன்னன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், மற்றும் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம்…

மாமன்னன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், மற்றும் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு முன் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்து வந்தது. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்றும் அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கும், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்களின் மாமன்னன். சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித்தட்டிக் இறுகிக் கிடக்கிறது. அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன்.

இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.