கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று காலை அமலுக்கு வந்தன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் நகை மற்றும் ஜவுளிக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 23 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக பூட்டிக்கிடந்த நகை மற்றும் ஜவுளிக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. சென்னை தி.நகரில் கடை திறக்கப்பட்டது முதலே மக்கள் கணிசமாக சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியின்றி செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் வெப்பநிலை சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உடைகள், நகைகள் வாங்காமல் காத்திருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கடைகளுக்குச் சென்று வாங்கி வருகின்றனர். முதல் நாள் என்பதால் கூட்டம் கணிசமான அளவே இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் கடைகளில் வழக்கம்போல கூட்டம் காணப்படும் எனவும் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் வணிக வளாகங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் திரையரங்குகள், விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் குறைந்த அளவே உள்ளது.







