காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, முழுநேர தலைவரை தேர்வு செய்தால் கட்சி பலப்படும் என்ற கருத்தும் வலுப்பெற்றதால், கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் எம்.பி.யும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்வு பெற்று வரலாறு படைத்தார். மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26-ந் தேதி பதவி ஏற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைத்தார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.