காய்கறி விலை தொடர் உயர்ந்து வருவதாகவும், ஆனால் அரசு தனது தோல்விகளை விளம்பரங்களின் மூலம் மறைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்க ஏராளமான இல்லத்தரசிகள் கூடுகின்றனர்.
இந்நிலையில் காய்கறி விலை உயர்வு வேலையில்லா திண்டாட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டர் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். “மோடி அரசின் தவறான கொள்கை காரணமாக பணவீக்கம் மற்றும் வேலையின்மை இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் பா.ஜ.க.வினர் அதிகார பேராசையில் மூழ்கியுள்ளனர். காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டில் வேலையின்மை விகிதம் 8.45% ஆக உயர்ந்துள்ளது. கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73%” என அவர் தெரிவித்துள்ளார். அரசு தனது தோல்விகளை விளம்பரங்களில் மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.







