பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் விக்ரம் தான் நடித்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. தங்கலான் திரைப்படம், கோலார் தங்க வயல் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி விவரிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு 50% நிறைவடைந்த நிலையில், இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஒத்திகையின்போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நடிகர் விக்ரம் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்ததாக படக்குழு அறிவித்தது.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தன் டிவிட்டர் பக்கத்தில், “அற்புதமான மனிதர்களுடன் 118 நாள்கள் பணியாற்றியது சட்டென ஓடிவிட்டது. ஒரு நடிகராக உற்சாகமான அனுபவங்களைப் பெற்றேன். இந்தக் கனவை ஒவ்வொரு நாளும் சாத்தியப்படுத்தியதற்கு நன்றி ரஞ்சித்.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.







