மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அண்மையில் சின்னங்களை ஒதுக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மையத்திற்கு புதுச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கமல்ஹாசன், டார்ச் லைட் சின்னத்தை தமிழகத்திலும் ஒதுக்க கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதனிடையே எம்ஜிஆர் மக்கள் கட்சி, தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் தேவையில்லை என தெரிவித்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் தங்களுக்கு சின்னம் கிடைத்து இருப்பதாகவும், இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், தன்னோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.







