ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுகள் நீக்கப்படவில்லை என்றால் ஆலை உபகரணங்கள் பாதிப்படையும் என ஆலையை ஆய்வு செய்த பின்னர் நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கையை வேதாந்தா தரப்பில் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. ஜிப்சம் கழிவுகளை நீக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் வேதாந்தா தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
மாவட்ட ஆட்சியரும் கழிவுகளை நீக்க அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் உபகரணங்களை நீக்க அனுமதியில்லை. அப்படித்தானே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வேதாந்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கழிவுகளை நீக்க அனுமதி வழங்கப்பட்ட சமயத்தில் வேதாந்தா நிர்வாகம் அதை செய்யவில்லை என குற்றச்சாட்டினார்.
தமிழ்நாடு அரசு நியமித்த நிபுணர்கள் குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி கூடுதல் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார் . அதன்படி தேவையான அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலையில் உள்ள ஜிப்சம் கழிவுகள் நீக்கப்படுவது உள்ளிட்ட பணிகளை வேதாந்தா நிறுவனம் தனது சொந்த செலவிலேயே செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் “ ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அகற்றவில்லை, ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு தடையாக இல்லை” என தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ளபடி கழிவுகளை நீக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க இயலாது எனக் கூறி வழக்கினை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.