முதல் நாள் வசூலில் குண்டூர் காரம் திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பதன் வாயிலாக நடிகர் மகேஷ் பாபு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார்.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் திரைப்படம் நேற்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஸ்ரீலீலா,மீனாட்சி சவுத்ரி என இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ளார்கள். தெலுங்கில் அட்டாரண்டிகி தாரேதி, அலா வைகுந்தபுரமுலோ போன்ற வெற்றி படங்களை கொடுத்த திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த படம் என்பதால் அவரது ரசிகர்களிடையே குண்டூர் ராரம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
கடைசியாக மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் பெரும் சரிவை சந்தித்ததால், குண்டூர் காரம் திரைப்படத்தின் வாயிலாக மகேஷ்பாபு கம்பேக் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை குண்டூர் காரம் திரைப்படம் பூர்த்தி செய்திருப்பது அதன் வசூல் சாதனை வாயிலாக உறுதியாகியுள்ளது. முதல்நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் குண்டூர் காரம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.94 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் ரூ.41.3 கோடி வசூல் சாதனை படைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கில் வெளிவந்த RRR, KGF 2 உள்ளிட்ட திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.







