செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூர் ஊராட்சியின் செயல்பாடுகளை மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நமது திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அரசு அதிகாரிகள்,அலுவலர்கள், ஊராட்சி மன்ற தகவல்கள், வார்டு உறப்பினர்கள் என சுமார் 40 பேர் செங்கல்பட்டு மாவட்டதிற்கு அரசு சார்பில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
படூர் ஊராட்சி, நிர்வாகம் வளர்ச்சி பாதையில் மற்ற ஊராட்சிகளுக்கு முன்னோடியாக திகழ்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வருகை தந்தவர்களுக்கு படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தங்களது ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினார்.
குறிப்பாக படூர் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் பணிகள், மாடித்தோட்டம், காளான் வளர்ப்பு, மூலிகை செடி வளர்ப்பு, பெண்களுக்கு சுய தொழில் மற்றும் ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் எடுத்துரைத்ததை, அவர்களுடன் வந்திருந்த பெண் ஒருவர் மொழி மாற்றம் செய்து விளக்கினார்.
மேலும் இங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்கள் சுய தொழில் செய்து வருவாய்
ஈட்டுவது குறித்தும் கூறினார். மாடி தோட்டம் மூலம் நல்ல வருவாய் உள்ளதாகவும், கொரோனா காலத்தில் மாடி தோட்டத்தில் வளர்த்த மூலிகை செடிகள் மிகவும் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் கூறினார்.
மகாராஷ்டிராவில் இருந்து வந்திருந்தவர்கள் படூர் ஊராட்சி நிர்வாகம் செயல் திறனை பார்வையிட்டதோடு, தங்களது செல்போனில் அதை காட்சிப்படுத்தியும், மேலும் படூர் ஊராட்சியில் உள்ளது போல் மகாராஷ்டிராவில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இறுதியில் படூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் உடன், குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர்கள் மீன் வறுவலுடன் தமிழக உணவை விரும்பி உண்டு மகிழ்ந்தனர்.








