ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக…

சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக இருந்தது. கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிட இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

நுரையீரல் குறைபாடு காரணமாக, நாக்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவர் உடல் நிலை மோசமானதை அடுத்து, அவருடைய புத்தகத்தை வெளியிட அவர் கணவர் முடிவு செய்தார்.

இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், மேலவை உறுப்பினர் அபிஜித் வஞ்சாரி, சட்டமன்ற உறுப்பினர் விகாஸ் தாக்ரே ஆகியோர், அவர் புத்தகத்தை ஐசியூ-வில் வைத்து வெளியிட்டனர். இதைக் கண்டு பூரிப்படைந்தார் சுபாஷினி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு புத்தகம் வெளியிடப்பட்டது. மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.