தஞ்சாவூர் நடனபுரீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற ஏலம் விடப்படும் இல்லத்தில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனை
விரைவில் சென்னைக்கு கொண்டு வர தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தாண்டந்தோட்டம் நடன புரீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. அங்குள்ள பார்வதி அம்மன் மற்றும் கோலு அம்மன் சிலைகள் உட்பட ஐந்து ஐம்பொன் சிலைகளும் திருடு போனதாக 1971 ஆம் ஆண்டு மே 13 ம் தேதி அன்று நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். ஆனால் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிலை திருடப்பட்டு 46 ஆண்டுகளாகியும் முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சமூக ஆர்வலர் வாசு என்பவர் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சிலைகள் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக எந்த துப்பும் துலங்கவில்லை.
இதன் பிறகு அந்த 5 சிலைகளின் புகைப்படங்கள் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்தில் உள்ளதும் தெரிய வந்தது. அது தொடர்பாக டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐஜி தினகரன் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலு அம்மன் சிலைகள் உட்பட திருடப்பட்ட ஐந்து சிலைகளும் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சியின் போது நடனபுரீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியத்துவத்தைப் பெற்றது ஆகும். அதனையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள்
மற்றும் ஏல மையங்களில் உள்ள சோழர் கால பார்வதி சிலைகளை தேடத் தொடங்கினர்.
முழுமையான தேடலுக்குப் பிறகு அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல வீட்டில் 52 செ.மீட்டர் உயரம் உடைய பார்வதி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பாண்டிச்சேரியில் உள்ள இந்தியா-பிரான்ஸ் கல்வி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதுதொடர்பாக பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு கல்வி
நிறுவனத்தில் உள்ள பார்வதி சிலையின் புகைப்படமும், நியூயார்க் ஏலத்தில் உள்ள சிலையும் ஒரே சிலைதான் என்பதை மாநில தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய நிபுணரான ஸ்ரீதர் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
ஆகவே அந்த சிலைகள் தஞ்சாவூர் கோவிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டுக்கு பலகோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரின் விசாரணையில் உறுதியாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து பார்வதி சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.