மகா சிவரத்திரி: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள்

மகா சிவரத்திரியையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாட்டு நிகழ்சிகள் நடைபெற்றன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் நேற்று மாலை 6 மணி அளவில் மகாசிவராத்திரி…

மகா சிவரத்திரியையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாட்டு நிகழ்சிகள் நடைபெற்றன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் நேற்று மாலை 6 மணி அளவில் மகாசிவராத்திரி முதலாம் கால பூஜை தொடங்கி நடைபெற்றது. குறிப்பாக கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் மற்றும் வடிவாம்பிகை அம்பாள் திருக்கோவில் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

மகா சிவராத்திரி விழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கோயில் குளக்கரையில் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு, களி மண்ணால் தயார் செய்யப்பட்ட சிறிய அளவிலான சிவலிங்கம், ருத்ராட்சம், அட்சதை, நிவேதன பிரசாதம், விபூதி, குங்குமம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சிவாச்சாரியார் மந்திரங்கள் கூற பக்தர்கள், தாங்கள் வைத்திருந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள யோகானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவன் பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய யாகசலையில் சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு யாகம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவராத்திரி விழாவில் சிவன் பார்வதியை தரிசனம் செய்தனர்.

சேலம் மாநகர் சுகவனேஸ்வரர் கோயில், உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவ வழிபாடு செய்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மகா சிவராத்திரியையொட்டி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவனந்தபும், பெங்களூரு, மைசூரு, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவிகளும் பங்கேற்று நடனமாடினர். நாட்டியாஞ்சலியை நூற்றுகணக்கான பக்தர்களும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் என்று அழைக்கப்படும், ராமலிங்கசுவாமி ஆலயத்தில், உள்ளது.ஒரே வளாகத்தில்108 சிவலிங்கங்கள் வரிசையாக அமையப்பெற்றுள்ளது. இந்த ஆலய லிங்கத்தை இராமபிரான் பிரதிஷ்டை செய்ததாகவும், இங்குள்ள அனுமந்த லிங்கம் அனுமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது. மகாசிவராத்திரியையொட்டி, ஏராளமான பக்தர்கள் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே புகழ்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில், மகா சிவராத்திரியையொட்டி, நடைபெற்ற நாட்டியாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் ஆடல் வல்லானுக்கு தங்களது நடனத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.