மக்களை அச்சுறுத்திய மக்னா – இரு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்த கேரள வனத்துறை

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PM 2 மக்னா காட்டு யானையை, கேரள மாநில வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட…

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PM 2 மக்னா காட்டு யானையை, கேரள மாநில வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உடைத்தும், 2 பெண்களை தாக்கியும் கொன்ற PM2 மக்னா வகையை சேர்ந்த அரிசி ராஜா யானையை, கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி தமிழக வனத்துறையினர் பிடித்தனர். பின், முதன்மை செயலாளர் உத்தரவுப்படி, முதுமலை புலிகள் காப்பகத்தில், ரேடியோ காலர் பொருத்தி மக்னா யானை விடுவிக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் மசினகுடி, தெப்பக்காடு பகுதிகளுக்கு மக்னா யானை வந்ததையடுத்து, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த யானை இரவோடு இரவாக சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி பஜாருக்குள் சென்றது. மக்னா யானை கேரளாவில் முகாமிட்டதால், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் ஆலோசனைப் படி, கேரள முதன்மை வனப்பாதுகாவலர் கங்காசிங், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் அடைத்து கண்காணிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழக மற்றும் கேரளா வனத்துறையினர் இணைந்து, குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று முத்தங்கா புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை இருந்ததை கேரள வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மயக்க ஊசி மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன், மக்னா யானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், மக்னா யானையானது முத்தங்கா புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கரோல் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்த யானைக்கு கும்கி பயிற்சி மற்றும் மனிதர்களிடம் பழகுவது குறித்த பயிற்சியை அளிக்க கேரளா வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.