மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
உசிலம்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள பிரசவ வார்டில் தினந்தோறும் சராசரியாக பத்து முதல் பதினைந்து பிரசவங்களும், பேறுகால பரிசோதனைகளுக்காக ஐம்பதிற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள பிரசவ வார்டின் மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பரிசோதனைக்கு வரும் பெண்கள் ஒருவித அச்சத்துடனே வருகின்றனர். ஏற்கனவே ஏழைகளே அதிகளவில் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் பல குறைகள் இருப்பதாக கூறி வரும் சூழ்நிலையில் கண்கூடாக காணப்படும் இதுபோன்ற அவல நிலை மேலும் அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து கேள்வி எழுப்ப தோண்ற செய்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நிதிப்பற்றாகுறையை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்படும் முன்னரே சீரமைக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
—வேந்தன்







