மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கான
ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை இந்த ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க சிலர் முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக ரயில்வே காவல்துறை தடவியல் நிபுணர்கள் குழுவினர் நேரில் சென்று ரயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர். அப்போது, வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டரின் பாகங்களை கைப்பற்றிய அவர்கள், சுற்றுலாப்பயணிகளின் பெட்டிகளில் இருந்து, கட்டு கட்டாக எரிந்த நிலையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரயில் தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ரயிலில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காயமடைந்த பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு விசாரணையை முடிப்பேன். அதே சமயம் ரயில் தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ரயில் தீ விபத்தின் பின்னணியில் சதி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளேன்” என தெரிவித்தார்.
இதனிடையே, தீ விபத்தில் சிக்கி, மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகளிடம் தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி விசாரணை நடத்தினார். மேலும் சமையல் ஊழியர்கள் இருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். காயமடைந்தவர்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே ரயில் பெட்டி தீ விபத்தில் உயிர் பிழைத்த 33 பேர் விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







