கரூரில் பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டியை ஊருக்குள் புகுந்து தாக்கிய விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், அல்லியா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஜீவா, உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து பேருந்தில் பயணம் செய்த போது அவருக்கும், புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர் ஜீவா மற்றும் அவரது பாட்டி காளியம்மாள் ஆகிய இருவரையும் ஒரு கும்பல் ஊருக்குள் புகுந்து தாக்கியது. காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரண்டு கல்லூரி மாணவர்கள், இரண்டு பள்ளி மாணவர்கள் என 4 மாணவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







