மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடற்கூராய்வு முடிவடைந்த நிலையில், இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து லக்னோ அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தேநீர் தயாரிப்பு பணியின்போது கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில்பெட்டி முழுவதும் மளமளவென்று பரவி கொளுந்துவிட்டு எரிந்த தீ விபத்தில், 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த நிலையில், இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மற்றும் தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி, ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி வனிதா உள்ளிடோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து லக்னோ செல்லும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள், மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் உடல்கள் இன்று காலை லக்னோ அனுப்பி வைக்கப்படுகிறது.







