9 உயிர்களை பலி வாங்கிய மதுரை சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில் உயிர் தப்பியவர்கள் சம்பவம் குறித்து அதிர்ச்சிகர தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்த 60 க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்வண்டி மூலமாக வந்துள்ளனர். இந்த பெட்டி மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 5 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கு காரணம் பயணி ஒருவர் கூறுகையில், ரயிலுக்குள் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்து தயாரித்த போது, தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயைக் கண்டதும், வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் கீழே இறங்க, அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதில் கோச்சில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகி உள்ளனர்.
தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தீயணைப்புக் குழுவினரும் அப்பகுதியில் குவிந்தனர். பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைப்பதற்காக சிலிண்டர் கொண்டு வந்துள்ளார்கள். சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணிகளிலின் மூலம் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் ரயில் பெட்டிகளில் பயணிகள் கொண்டு வந்துள்ள சிலிண்டர் அதிகளவில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா, காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்னர். மேலும், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.
ரயில்வே விதிகளின்படி, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது. குறிப்பாக, தீப்பெட்டி, பட்டாசுகள் போன்றவைக்கே அனுமதி இல்லாத நிலையில், பயணிகள் எப்படி சிலிண்டரை பயணத்தின் போது எடுத்து வந்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சரியான சோதனைகள் இல்லாதது இதுபோன்ற கோர சம்பவங்களுக்கு காரணங்களாக அமைவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிர் தப்பியவர்கள் இந்த துயர சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதன்படி, உயிர் தப்பிய பெண் கூறுகையில், “எங்களுடன் யாத்திரை வந்திருந்த மக்களில் யாரோ சிலர் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலிண்டர் வெடித்து புகை வரத் தொடங்கியதும் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டோம். அப்போது சிலர் உள்ளே மாட்டிக் கொண்டார்கள். அதில் என் கணவரும் ஒருவர்,” என்று தெரிவித்தார்.
அத்துடன், “கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தென்மாநிலங்களில் இருக்கும் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக லக்னௌவில் இருந்து கிளம்பி வந்தோம். நேற்று நாகர்கோவிலில் இருக்கும் பத்மநாப சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் மூலமாக மதுரை வந்தோம்.
இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்தோம். அப்படியிருந்த சூழலில் இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை,” என வேதனையுடன் தெரிவித்தார்.







