மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை ரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







