மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்த நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினர். மதுரையில் உள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன்…

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்த நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையில் உள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலின் 20 ஆண்டு காலமாக தக்காரக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். 70 வயதாகும் தக்கார் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரைத் திருவிழாவில் கூட கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் இவரது உடல் கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு செய்தி கேட்டு காலை முதலே அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்ககளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கருமுத்து கண்ணனின் மறைவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன் மறைந்த செய்தியால் அதி்ர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது தந்தை காலத்தில் இருந்தே கழகத்தின் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், நான் எப்போது மதுரை சென்றாலும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்பார். தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குநராகப் பொறுப்பு வகித்துப் பல ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி செய்த மனிதநேயப் பண்பாளர்.

2006-இல் கழக ஆட்சி அமைந்ததும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர்க் குழுத் தலைவராக கருமுத்து கண்ணன் அவர்கள் நியமிக்கப்பட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தக்காராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, கோயில் புனரமைப்புப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு – மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்குவதில் துணை நின்றவர். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன்- எனது தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழுவிலும் உறுப்பினராக இருந்து இந்து சமய அறநிலையத்துறைக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியவர்.

தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட திரு. கருமுத்து கண்ணன் அவர்களின் மறைவு பேரிழப்பு. அவரது மறைவினால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பெரிய கருப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் கருமுத்து கண்ணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கருமுத்து கண்ணனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.