மதுரை கள்ளழகர் கோயில் வளாகத்தில் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தென் மாவட்ட மக்களின் முக்கிய திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்திற்குள்ளேயே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து, இந்த ஆண்டு கோவில் வளாகத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள வைகை நீரில், கள்ளழகர் எழுந்தருளும் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், சமூக வலைதளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் வீட்டிலிருந்தபடி தரிசனம் செய்யும்படி கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.







