மதுரையில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.218 கோடியில் 6 தளங்களைக் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து http://www.kalaignarcentenarylibrary.org என்ற பெயரில் புதிய இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதள பக்கம் மூலம் நூலகம் பற்றிய சிறப்பு, உறுப்பினர் சேர்க்கை, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விண்ணப்பித்தல் குறித்த விவரம் இடம்பெற்றுள்ளது.
மேலும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும், பொதுமக்களும் இந்த இணையதளம் மூலம் புத்தகங்கள்,எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்களை தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் ஆன்லைன் முறையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் உருவாக்க முடிவு செய்யப்ட்டுள்ளது.






