மதுரை : சிறுவன் உயிரிழப்புக்கு குளத்தில் விஷம் கலந்தது காரணமா?

மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குளத்தில் குளித்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.   மதுரை மாநகர் உத்தங்குடி அருகே…

மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குளத்தில் குளித்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

மதுரை மாநகர் உத்தங்குடி அருகே பழமையான ஊரணி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, குளத்தில் குளித்த கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தான்.

 

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று குளத்தில் உள்ள மீன்கள் செசத்து மிதந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்ததால், பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒருவேளை ஊரணியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊரணியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குளித்து விடாமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். குளத்தில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தண்ணீரை எடுத்து பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.