நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரி – சிறை தண்டனை விதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித்துறையின் (அப்போதைய 2019 ஆண்டு) செயலாளர் பிரதீப் யாதவ் , இரண்டு வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர்…

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித்துறையின் (அப்போதைய 2019 ஆண்டு) செயலாளர் பிரதீப் யாதவ் , இரண்டு வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் கல்வித்துறை சார்ந்த பண பலன்கள் கோரி மதுரை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானபிரகாசம், கடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமாக அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை உயர் செயலாளராக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி, மனுதாரர் வழக்கில் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்கு பலமுறை வாய்ப்பளித்தும் அதை நிறைவேற்றாதது பற்றி கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதி கூறுகையில், ஒரு வழக்கில் தீவிர ஆலோசனை செய்த பின்னர்தான் நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. ஆனால் அந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை. கோர்ட்டு உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க இயலாது என்று கடும் கண்டனம் தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித்துறையின் அப்போதைய செயலாளர் பிரதீப் யாதவிற்கு, இரண்டு வார சிறை தண்டனை மற்றும் இரண்டு கல்வி துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் நீதிபதி வரும் 9 ஆம் தேதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஆஜராகவும், அதோடு அபராதமாக ரூபாய் 1000 விதித்து நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.