கொரோனா ஊரடங்கு தாக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களாகப் பள்ளிகள் விடுமுறையில் உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நியூஸ் 7தமிழ் மேற்கொண்ட முயற்சியால் தெரியவந்துள்ளது.
மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டி கோவில் அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்த 17வயது சிறுமிக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. +2 வகுப்பு படித்துவரும் அந்த சிறுமி தன்னுடைய திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாட்ஸ் அப் எண்ணுக்குப் புகார் அனுப்பி இருந்தார்.
தகவல் கிடைத்தவுடன் அண்ணாநகர் காவல் துறையினர் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற நடைபெறவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் அந்த மாணவி நேற்று தன்னுடைய வீட்டில் தூக்கிட்ட உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவியின் உயிரை மாய்த்துக் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து பாண்டி கோவில் சிறுமியின் திருமணம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
123 குழந்தை திருமணங்கள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் ஆய்வு மேற்கொண்டது. இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்ற மே மாதம் வரை 123 குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் குழந்தைகள் பாதுகாப்பு தொலைப்பேசி எண்ணான 1098-க்கு வந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் 96 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 27 குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்ற முடிந்த பிறகு தகவல் கிடைக்கப் பெற்றதால் சிறுமிகளைத் திருமணம் செய்துகொண்ட நபர், சிறுமியின் பெற்றோர், மணமகனின் பெற்றோர் மற்றும் திருமணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாதத்தில் அதிகரித்த குழந்தை திருமணங்கள்
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 44 குழந்தை திருமணங்கள் தொடர்பாகப் புகார் வந்துள்ளது. இதில் 36 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக,8 திருமணங்கள் திருமணம் முடிந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020-ம் ஆண்டு 23 குழந்தை திருமணங்கள் மட்டுமே நடந்த நிலையில் 2021-ம் ஆண்டில் ஐந்து மாதத்தில் 44 திருமணங்கள் தொடர்பாகப் புகார் வந்துள்ளது மதுரையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு எடுத்துக்காட்டாக உள்ளது.
அதேபோல் 2019-ம் ஆண்டு 84 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 3 திருமணங்கள் மட்டும் திருமணம் முடிந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அதிகளவு குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் செய்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் எச்சரக்கைவிடுத்துள்ளது.
குழந்தை திருமணங்கள் தொடர்பாக 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
நியூஸ் 7 தமிழ் செய்திகளுக்காக மருதுபாண்டி, மதுரை.







