மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு 17 வயது என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவன் கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;
24.05.2026 அன்று இரவு மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மீனாட்சி கார் பார்க்கிங்கில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றப் பின்னணி கொண்ட மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் முன் விரோதத்தால் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கு மேற்பட்ட எதிரிகளால் கொலை செய்யப்பட்டது குறித்து விளக்குத்தூண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினரின் தீவிர விசாரணைக்குப் பின் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய எதிரிகளான மதுரை திடீர் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் முத்துமணி வயது 28/26, மற்றும் அவனது உடன்பிறந்த தம்பி ராஜ் வயது 26/26, மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சதீஷ்குமார் வயது 28/26, வடக்கு மாசி வீதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஹரி கிருஷ்ணன் வயது 18/26 மற்றும் திடீர் நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் முத்துக்குமார் வயது 19/26 ஆகியோர் கடந்த மாதத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மேற்படி சிறுவனை கொலை செய்தது தெரிய வரவே மேற்படி எதிரிகளை கைது செய்தும் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கைப்பற்றி இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இக்கொலை வழக்கில் எதிரிகளை விரைந்து கைது செய்த விளக்குத்தூண் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







