உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் தரக்குறைவான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவுகள் செய்து சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரசாரம். இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை. எனவே, கடந்த ஜூலை.3-ஆம் தேதி அளித்த புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சீமான் மீது தொடர்ந்து அவதூறான கருத்துக்களை இந்த யூடியூபர்கள் திட்டமிட்டு பதிவு செய்து வருகின்றனர். புகார் மனு அளித்தும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது என வாதிட்டனர்.
அதே போல, பழனி கோயில் இட விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் 100 கோடி பெற்றார் என பேசியவரை உடனடியாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். ஆனால் சீமான் குறித்து பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி “தேர்தலில் தோற்கலாம் வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக சீமான் உருவாகி உள்ளார். முதல்வர் குறித்து திமுக எம்.எல்.ஏ பேசினால் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்கிறீர்கள். காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா…? ஒரு தலைவர் குறித்து அவதூராக பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.
இதனை தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பில் யூடியூபர்கள் சீமானை மிகவும் கொச்சையாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர். இதனை ஏற்க முடியாது. எனவே சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று மாலைக்குள் இது குறித்து வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.




