மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான விளம்பர பிரசார வாகனத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, மாநாட்டு தொடக்க பாடலை வெளியிட்டார்.
மதுரை அருகே வலையங்குளத்தில் இம்மாதம் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை அந்தக் கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மதுரை மண்டலம் சார்பில் தயார் செய்யப்பட்ட விளம்பர பிரசார வாகனத்தை சேலம் நெடுஞ்சாலைநகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த பிரசார வாகனத்தில் அதிமுக வரலாற்றின் பொன்விழா என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யன், மண்டல துணைத் தலைவர் கௌரிசங்கர், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மதுரை மாவட்ட இணைச்செயலாளர் தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாநாட்டின் தொடக்கப் பாடலையும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த பாடலானது விளம்பர வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக பொன்விழா மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக இந்த விளம்பர வாகனம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த விளம்பர பிரசார வாகன சுற்றுப்பயணத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்துடன் பயணித்தனர்.







