மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அரசை குறைகூறியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலின் பொது தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாளை நடைபெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து தீட்சிதர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது, அதனை சட்டப்படி எதிர்கொள்வதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர். அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என கூறிய அமைச்சர், அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தீட்சிதர்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவித்தனர். அரசின் நிலைப்பாடு, இந்து சமய அறநிலையத் துறை சட்டங்கள் குறித்து நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும்” என்றார்.
இந்து சமய அறநிலையத் துறை கொள்ளைக்காரர்களின் கூடாரமாக உள்ளது என மதுரை ஆதீனம் பேசியது குறித்த கேள்விக்கு, “மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அப்படி பேசியுள்ளார். மற்ற ஆதீனங்கள், ஜீயர்கள், தீட்சிதர்கள் நமது அரசோடு இணக்கமாக உள்ளனர். எனவே ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைகூறக் கூடாது” என்று அமைச்சர் கூறினார்.
மேலும், “விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும். ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்கும் சமமான ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி உள்ளது” என்றார்.







