116 பேர் முறைகேடாக தொலைதூரக் கல்வி படித்ததாக சான்றிதழ் பெற முயன்ற
விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னைப்
பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் 116 பேர் முறைகேடாக
படிக்காமலேயே சான்றிதழ் பெற முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த
பல்கலைக்கழக சட்டக்கல்வி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமையில் குழு
அமைக்கப்பட்டது.
சொக்கலிங்கம் தலைமையிலான குழு தனது விசாரணை அறிக்கையை, பல்கலைக்கழக
துணை வேந்தர் கௌரியிடம் அண்மையில் சமர்ப்பித்தது.
விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரில், பல்கலைக்கழக உதவி பதிவாளர்
தமிழ்வாணன், உதவி பிரிவு அலுவலர் எழிலரசி, அட்டெண்டர் ஜான் வெஸ்லின், ஓய்வு
பெற்ற உதவி பதிவாளர் மோகன்குமார், ஓய்வு பெற்ற பிரிவு அலுவலர் சாந்தகுமார்
ஆகிய 5 பேர் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததன் காரணமாக பணியிடை நீக்கம்
செய்யப்படுவதாகவும், ஓய்வுபெற்ற இருவருக்கு ஓய்வூதிய பலன்கள்
நிறுத்தப்படுவதாகவும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி அறிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் நடைபெற்ற தொலைதூரக் கல்வி தேர்வில், முறையாக பதிவு செய்து
படிக்காமலும், எவ்வித தேர்வுக் கட்டணம் செலுத்தாமலும் 116 பேர் முறைகேடாக
தேர்வை எழுத முயற்சித்து சான்றிதழ் பெறுவதற்கு பல லட்சம் பணம் பெற்றுக் கொண்டு
உதவி செய்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்ட 5 பேர் மீதும் விசாரணைக் குழு குற்றம்
சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.








