பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றம், வருவாய் விவரங்களை தாக்கல் செய்யவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரியும், ரூ.10 லட்சம் நஷ்ட ஈடுக்கோரியும் , சென்னையை சேர்ந்த மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தாம் தயாரித்த படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், விஜய் ஆண்டனி சார்பில் கடந்த மாதம் ஏப்ரல் 18-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. ராஜகணபதியின் படம் குறித்து தமக்கு எந்த தகவலும் தெரியாது எனவும், பிச்சைக்காரன்-2 படத்திற்கும், அவரது படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் கூறியிருந்தார். மேலும் படத்தின் கதை கருவை கொண்டு 1944ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி உள்ளதால், கதையின் கருவை உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்ததோடு, வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









