ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகள் – ஜூலை 19-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை ஜூலை 19-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை ஜூலை 19-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள் சார்பில் தொடர்பபட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்னிலையில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி, தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா அரசுகள், சட்டத்தை திருத்தி ஆன்லைன் ரம்மியை தடை செய்தன. அந்த சட்ட திருத்தங்களை உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இந்த தீர்ப்பை எதிர்த்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறி, பொது சுகாதாரத்தின் அடிப்படையிலும், பொது ஒழுங்கு அடிப்படையிலும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டில் விளையாடுவதால் பொது ஒழுங்கு எப்படி பாதிக்கிறது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதோடு ஆன்லைனில் விளையாடுவதால் திறமைக்கான விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டுகளாக கருத முடியாது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹ்தகி ஆகியோர் இந்த வாதங்களை முன்வைத்தனர்.

இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.